கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன.
முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும். 2ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடை பெறும். நியாயவிலை கடை பணியாளர், ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.
பொதுமக்கள் விண்ணப்பங்களை பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வர தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் 24ம் தேதி விண்ணப்பங்கள் பெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வீடுகள் தோறும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வழங்கும் பணி தொடங்கியது.
கடலூர் புறநகர் பகுதியான கூத்தப்பாக்கம் மற்றும் மாநகராட்சி பகுதி திருப்பாதிரிப்புலியூர், சொரக்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் சரியான முறையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விண்ணப்பத்தை பெற்று கொண்ட குடும்ப தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வரவேண்டும்.விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய் துறையில் வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெற தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.