சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் 7.35 லட்சம் பேருக்கு 2வது கட்டமாக உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்பட்டது. இவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”கடந்த சில நாட்களாக எனக்கு காய்ச்சலும் தொண்டை வலியும் இருந்தது. காய்ச்சல் குணமாகி இருந்தாலும் தொண்டை வலி இன்னும் சரியாகவில்லை. தொண்டை வலியை விட தொண்டில் தொய்வு ஏற்படக்கூடாது.உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது.மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்ற முடியாத திட்டம் என்றனர்.செயல்படுத்த முடியாது எனக் கூறிய மகளிர் உரிமைத் திட்ட வாக்குறுதியை செயல்படுத்தி உள்ளோம்.பாரபட்சம் இன்றி தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.அரசின் பக்கம் உள்ள நியாயத்தை மக்களே புரிந்து கொண்டு தகுதியானவர்கள் மட்டும் மேல்முறையீடு செய்தனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது.புதிதாக திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களுக்கு நேற்று ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. நவம்பர் மாத கலைஞர் மகளிர் உரிமை தொகை இன்று மாலைக்குள் அனைவருக்கும் வரவு வைக்கப்படும்.இந்த திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தகுதியுள்ள யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.தகுதியானோர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் முதல் அவர்களுக்கு தொகை வரவு வைக்கப்படும்.மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்துகாட்டி வெற்றி பெற்றுள்ளோம்.தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் வரை திராவிட மாடல் அரசின் பணி தொடரும்,”என்றார்.