Wednesday, February 21, 2024
Home » கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகினர் சென்னையில் பிரமாண்ட விழா: நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகினர் சென்னையில் பிரமாண்ட விழா: நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பு

by Karthik Yash

சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3ம் தேதி முதல் 2024 ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கலைஞர் செய்த மிகப்பெரிய பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ கலைவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டு முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதை தொடர்ந்து ‘கலைஞர் 100’ விழா ஜனவரி 6ம் தேதி நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மறுபக்கம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் தீவிரமாக நடந்தது. கலைஞர் 100 விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சென்று தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராம நாராயணன், பொதுச்செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் லிங்குசாமி, சிவா, பூச்சிமுருகன் உள்ளிட்டோர் அழைப்பிதழ் வழங்கினர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா கரகாட்டம், தப்பாட்டம், கதகளி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கலைஞரின் புகழ் பாடும் பாடல்கள் இடம்பெற்றது. இதில் பல்வேறு பாடகர்கள் கலந்து கொண்டு பாடினர். நடிகைகள் சாய்ஷா, லட்சுமி மேனன், ஜூவா உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. கலைஞரின் அரசியல் திரை அனுபவங்கள், இலக்கிய பாதை ஆகியவை பற்றிய ஆவணப்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.

இந்த ஆவண படத்தை திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கினார். கலைஞரின் இளமை பருவம் முதல் முதுமை வரையிலான மேடை நாடகம், கலைஞரின் தசாவதாரம் என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தை திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். நடிகர் பார்த்திபன் குரலில் இந்த நாடகம் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விழா இரவு 10 மணி வரை நடந்தது. முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டதால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரமாண்ட விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் கூடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒட்டு மொத்த தமிழ் திரையுலக கலைஞர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி நேற்று அனைத்து சினிமா படப்பிடிப்புகள், பிற திரைப்பட பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் கலைநிகழ்ச்சிகள், கலைஞரின் சாதனைகளை போற்றி சிறப்பு நிகழ்ச்சிகள், கலைஞர் கதை, வசனம் எழுதிய திரைப்படங்களிலிருந்து முக்கியமான காட்சிகள் திரையில் ஒளிபரப்பப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமின்றி, தென்னிந்திய நடிகர்கள் சங்கம், பெப்சி, இயக்குனர்கள் சங்கம் உள்பட அனைத்து திரையுலக சங்கங்களும் இணைந்து இந்த விழாவை பிரமாண்டமான முறையில் நடத்தினர். விழாவில் திரையுலகம் சார்பில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெயம்ரவி, மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்மூட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் பிரபாஸ், வெங்கடேஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடிகையும் ஆந்திரா மாநில அமைச்சருமான ரோஜா, நடிகை நயன்தாரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் விழாவில் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

nineteen − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi