சென்னை: கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இதில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் ஓர் ஆண்டுக்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நினைவு நாணயம்’ வெளியிட ஒன்றிய அரசுக்கு கடந்தாண்டு ஜூலை 23-ம் தேதி கடிதம் எழுதினார். இந்த நாணயத்தை, கடந்த ஜூன் 3-ம் தேதி கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.
விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி-எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திரையுலக பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.