சென்னை: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜவினர் பங்கேற்பார்கள் என்று பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் கலைஞரின் 100 ஆண்டு கால சாதனையாக, 100 ரூபாய் நாணயம் வெளியிட வேண்டும் என்று மாநில அரசு, ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. ஒன்றிய அரசும் அனுமதி கொடுத்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் விழாவுக்கு வர வேண்டும் என்று அன்போடு அழைத்தார். பாஜ அலுவலகத்திற்கும் திமுக அலுவலக செயலாளர் பூச்சி முருகன் பத்திரிகை வழங்கி அழைத்து இருந்தார்.
எங்களை பொறுத்தவரை இதை எல்லாம் அரசியலாக பார்க்க போவது கிடையாது. கலைஞருக்கு கிடைக்கக்கூடிய மரியாதை கிடைக்க வேண்டும். விழாவில் பாஜவினர், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நான் பங்கேற்கிறோம். மக்களுக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ள குஷ்புவை கட்சி சார்பாக வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.