சென்னை : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 27ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூ.10,65,21,98,000 வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டது.
இதையடுத்து நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15, விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை வரவு வைக்கப்பட்டது.அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்து போனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையம் வழியாக இம்மாதம் 18ம் தேதிக்குள் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அறிவித்து இருந்தது. இதையடுத்து, இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்ய பொதுமக்கள் குவிந்தனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கேட்டு, சுமார் 7 லட்சம் பேர் வரை அரசுக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. தகுதியுடைய நபர்கள் இ – சேவை மையத்திற்கு சென்று, தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டறிய வேண்டும். தவறு இருக்கும் பட்சத்தில் ரூ.1000 பெற தகுதியாக இருந்தால் ஆதார் எண் மூலம் இன்றைக்குள் மேல்முறையீடு செய்யலாம். பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு காரணம், அரசு பணியில் இருப்பவர்கள், வருமான வரி செலுத்துவோர், சொந்த கார் மற்றும் ஆண்டுக்கு 3,600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த மகளிர்களின் விண்ணப்பங்கள்தான் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.