Sunday, June 22, 2025
Home செய்திகள்Banner News 102வது பிறந்தநாளான செம்மொழி நாள் விழாவில் கலைஞர் செம்மொழி தமிழ் விருது: 4 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

102வது பிறந்தநாளான செம்மொழி நாள் விழாவில் கலைஞர் செம்மொழி தமிழ் விருது: 4 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Neethimaan

* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
* தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை

சென்னை: கலைஞர் பிறந்தநாளான செம்மொழிநாள் விழாவில், 2025ம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழி தமிழ் விருது, செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை, தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர், தமிழ் வினையடிகள் – வரலாற்று மொழியியல் ஆய்வு மற்றும் சங்க இலக்கிய சொல்வளம் ஆகிய நூல்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, பலமொழிகளுக்குத் தாய், பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழி தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை, இலக்கிய தனித்தன்மை வெளிப்பாடு-பங்களிப்பு, மொழிக்கோட்பாடு ஆகிய தகுதிப்பாடுகளை கொண்ட தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுதந்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையை போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி (நேற்று) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, சென்னை, கலைவாணர் அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளான நேற்று ‘செம்மொழி நாள் விழா’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்மொழி உருவாக்கம், தொல்லியல் சான்றுகள், செம்மொழி தகுதி, 1815 முதல் 1950 வரை வெளிவந்த செவ்வியல் நூல்கள் 2021 முதல் 2025 வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்வி கழகத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் கருவூலம் மற்றும் ஒளிப்படங்கள் கொண்டு கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, ‘முத்தமிழறிஞரின் முத்தமிழ்’ இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியும், ‘எல்லோர்க்கும் எல்லாமுமாய்’ என்ற தலைப்பில் கலைஞர் குறித்த ஆவணப்படமும், செய்தித்துறையால் உருவாக்கப்பட்ட ‘செம்மொழி நாள்’ குறித்த குறும்படமும் திரையிடப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு, 2025-ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினையும், விருது தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கலைஞரின் திருவுருவச் சிலையும் வழங்கி சிறப்பித்தார். செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவன் சா.முஹம்மது அர்ஷத்துக்கு ரூ.15,000, இரண்டாம் பரிசு பெற்ற விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி பா.தமிழரசிக்கு ரூ.10,000, மூன்றாம் பரிசு பெற்ற தர்மபுரி மாவட்டம், அரசு மாதிரிப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி மு.கோகிலாவுக்கு ரூ.7,000, கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற மதுரை மாவட்டம், பாரதியார் பதின்ம மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவன் செ.அழகுபாண்டிக்கு ரூ.15,000, இரண்டாம் பரிசு பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், விஜயலெட்சுமி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் ர.தரணீஷ்க்கு ரூ.10,000, மூன்றாம் பரிசு பெற்ற தஞ்சாவூர் மாவட்டம்,  சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி பி.கீர்த்தனாவுக்கு மூன்றாம் பரிசாக ரூ.7,000 வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் நடந்த பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி நா.சீ.நந்தனாவுக்கு ரூ.15,000, இரண்டாம் பரிசு பெற்ற தர்மபுரி மாவட்டம், வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி மாணவர் த.தங்கமுத்துக்கு ரூ.10,000, மூன்றாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை மாவட்டம், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி வீ.ஜெயலட்சுமிக்கு ரூ.7,000; கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், ஜி.டி.என். கலைக்கல்லூரி மாணவர் க.விஜயகாந்த்துக்கு ரூ.15,000, இரண்டாம் பரிசு பெற்ற தென்காசி மாவட்டம், ஸ்டெல்லா மேரீஸ் கல்வியியல் கல்லூரி மாணவி இல.இலக்கியாவுக்கு ரூ.10,000, மூன்றாம் பரிசு பெற்ற திருநெல்வேலி மாவட்டம், யுனிவர்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவி அ.பிரியதர்ஷினிக்கு ரூ.7,000, பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்பட்டன.

தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை தமிழறிஞர்களுக்கு ரூ.4,500ல் இருந்து ரூ.7,500 ஆகவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500ல் இருந்து ரூ.7,500 ஆகவும், எல்லைக்காவலர்களுக்கு ரூ.5,500ல் இருந்து ரூ.7,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என 2025-2026ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது உதவித்தொகை பெற்று வரும் தமிழறிஞர்கள் 217 பேருக்கும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 621 பேருக்கும், எல்லைக்காவலர்கள் 60 பேர் என மொத்தம் 898 பேருக்கும் உயர்த்தப்பட்ட வீதத்தில் உதவித்தொகை பெற ஒரு ஆண்டிற்கு ரூ.3,90,60,000 தொடர் செலவினமாக நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அகவை முதிந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு ஒப்பளிப்பு அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வாயிலாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ராஜேந்திரன் சங்கரவேலாயுதன் எழுதிய ‘தமிழ் வினையடிகள் – வரலாற்று மொழியியல் ஆய்வு’ மற்றும் பா.ரா.சுப்பிரமணியன் எழுதிய ‘சங்க இலக்கிய சொல்வளம்’ ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டார். மேலும், சுகி சிவம் தலைமையில் செம்மொழியின் தனிச்சிறப்பு ‘அதன் தொன்மையே!’ ‘அதன் இளமையே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் புலவர் சண்முகவடிவேலு, புலவர் மா.இராமலிங்கம், கவிதா ஜவகர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் உரையாற்றினர்.

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், மேயர் பிரியா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன், எம்பி ஆ.ராசா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், கலை பண்பாட்டு துறை இயக்குநர் கவிதா ராமு, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு, 2025ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது, விருது தொகை ரூ.10 லட்சத்திற்கான காசோலை, கலைஞரின் சிலை வழங்கப்பட்டது.
* தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் முதல்பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவன் முகமது அர்ஷத்துக்கு ரூ.15,000 வழங்கப்பட்டது.
* கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற மதுரை மாவட்டம், பாரதியார் பதின்ம மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவன் அழகுபாண்டிக்கு ரூ.15,000 பரிசு வழங்கப்பட்டது.
* கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் நடந்த பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி நந்தனாவுக்கு ரூ.15,000 பரிசு வழங்கப்பட்டது.
* கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், ஜி.டி.என். கலைக்கல்லூரி மாணவர் விஜயகாந்த்துக்கு ரூ.15,000 பரிசு வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi