சென்னை: தமிழ் போல் வாழ்க உன் புகழ் என கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுக எம்.பி. கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார். கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில், கலைஞர் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.
திராவிடத் தீ நெஞ்சினில் கனன்று எரிகிறது: கனிமொழி எம்.பி.
அப்பா! ஆசான்! தலைவர்! இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்!
கலைஞர் புகழ் போற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
கலைஞருக்கு பிரேமலதா புகழாரம்:
இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.