உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, கடல்மங்கலம் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில், கடல்மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ரேஷன் கடை கட்டிடத்தை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து காணப்படுகிறது.
மேலும், கட்டித்தின் சீலிங் பூச்சுக்கள் அவ்வப்போது உடைந்து விழுந்தும், கட்டிடத்தின் தரைகள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைக்குள் எலிகளின் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ரேஷன் பொருட்களை பாதுகாத்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களும் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டிடத்தை அகற்றி புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.