சென்னை: ‘கக்கன்’ திரைப்பட ஒலிநாடா, டிரைலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதை கக்கனின் மகள் மற்றும் பேத்தி பெற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் முதல்வராக காமராஜர் இருந்த போது பொதுப்பணித்துறை அமைச்சராக கக்கன் இருந்தார். எளிமைக்கும், நேர்மைக்கும் உதாரணமாக திகழ்ந்த கக்கனின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகியுள்ளது. இந்த படத்தில் கக்கனாக நடித்திருக்கும் ஜோசப் பேபி, படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். திரைப்படத்தை பிரபு மாணிக்கம் இயக்கியுள்ளார். தேவா, இசையமைத்துள்ளார். கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டி என்ற ஊரிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கோபண்ணா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ‘கக்கன்’ திரைப்பட ஒலிநாடா மற்றும் டிரைலரை வெளியிட்டார். இதை, கக்கனின் மகள் கஸ்தூரிபாய், ஐபிஎஸ் அதிகாரியான அவரது பேத்தி ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து, கக்கனாக நடித்து படத்தை தயாரித்த ஜோசப் பேபி மற்றும் இசையமைப்பாளர் தேவா, பாடலாசிரியர் ஏகாதசி, இயக்குனர்கள் பிரபு மாணிக்கம், ராகோத் விஜய், படைப்பாக்க இயக்குனர் ஏ.எஸ்.சந்தோஷ் உள்ளிட்ட திரைப்பட குழுவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.