*துணை முதல்வர் பவன் கல்யாண் தொடங்கி வைத்தார்
திருமலை : காக்கிநாடா அடுத்த பிதாபுரம் தொகுதியில் ரூ.5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் தொகுதியில் துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் உள்ளகொல்லப்ரோலு மண்டலம் பகுதியில் ரூ.5.52 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, ஜில்லா பரிஷத் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.28.5 லட்சம் மதிப்பீட்டில் சிஎஸ்ஆர் நிதியில் மேற்கொள்ளப்படும் கொல்லப்ரோலு தாசில்தார் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர், மின் மற்றும் சுகாதார பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் கடந்த ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கொல்லப்ரோலு புறநகர் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு திட்டத்தின் ஒரு பகுதியாக 2,200 ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு பெய்யும் சிறிய மழைக்கே சுத்தகட்டா கால்வாய் நிரம்பி வெள்ள நீர் வீட்டை சுற்றி சாலைகளில் மூழ்கி விடுகிறது.
அதனை தடுக்க ரூ.4 கோடி மதிப்பீட்டில், சுத்தகட்டாவில் 9.2 கி.மீ. தூரத்திற்கு பாலம் கட்டும் பணியை துணை முதல்வர் பவன்கல்யாண் தொடங்கி வைத்தார். இந்த பாலம் கட்டினால் அந்த 2,200 குடும்பங்களின் கஷ்டம் தீரும்.
இதுதவிர, மொகலி சுரிடு குளத்தை அழகுபடுத்த ரூ.3.2 லட்சம் மதிப்பீட்டில் சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணியை தொடங்கி வைத்தார். மேலும், சூரம்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், கொல்லப்ரோலு ஜில்லா பிரஜாபரிஷத் மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கல், ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் மண்டல பிரஜாபரிஷத் பள்ளி எண்.2 கொல்லப்பரோலு வகுப்பறைகள் கட்டுமானம், மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் உதவி உபகரணங்களை இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் சார்பில் வழங்கினார். மொத்தம் 143 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகள் என 240 சாதனங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் கொல்லப்ரோலுவில் உள்ள ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகத்தை துணை முதல்வர் பவன் கல்யாண் திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.