சென்னை: கைம்பெண் நுழைந்தால் கோயில் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கை இன்னும் மாநிலத்தில் நிலவுவது துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா, கெட்டிசேவியூர் கிராமத்தில் உள்ள பெரிய கருப்பராயன் கோயிலில் பூசாரியாக இருந்த பொங்கியப்பன் கடந்த 2017ம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்த கோயிலில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஆடித்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பூசாரி பொங்கியப்பனின் மனைவி தங்கமணி மற்றும் மகனை கோயிலுக்குள் நுழைய அந்த ஊரை சேர்ந்த அய்யாவு என்பவரும், முரளி என்பவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தங்கமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தங்கமணி தரப்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன், காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆகியோர் ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதி, கைம்பெண் கோயிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்ற என்ற மூட நம்பிக்கைகள் தமிழ்நாட்டில் இன்னும் நிலவுவது துரதிர்ஷ்டவசமானது. ஆண்கள் தங்கள் வசதிக்கேற்ப வகுத்த இந்த கோட்பாடுகள் மற்றும் விதிகளால், கணவனை இழந்த பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாகரிக சமுதாயத்தில் இவையெல்லாம் தொடர அனுமதிக்க முடியாது.
மனுதாரர் தங்கமணியும், அவரது மகனும் திருவிழா மற்றும் கடவுள் வழிபாட்டில் கலந்துகொள்வதை தடுக்க எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. மனுதாரரை கோயிலுக்குள் நுழைய விடாமல் யாரேனும் தடுக்க முயற்சித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கமணி கோயிலுக்குள் செல்வதை தடுக்கும் அய்யாவு மற்றும் முரளி ஆகியோரை சிறுவலூர் காவல் நிலைய ஆய்வாளர் அழைத்து கோயிலுக்கு வரும் தாய், மகனையும் தடுக்கக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி வழங்கப்படும் அந்த அறிவுறுத்தலையும் மீறி அவர்கள் இருவரும் செயல்பட்டால் சட்டத்திற்குட்பட்டு இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். திருவிழா நடக்கக்கூடிய இரு நாட்களிலும் தாயும் மகனும் கலந்து கொள்வதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.