பணகுடி: இந்தியாவின் கனவு திட்டமான நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2025ல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ககன்யான் திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் சி.இ.20 கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை ஓட்டம், நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் 200 விநாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. இதற்கான கவுன்ட் டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இதனால் இஸ்ரோ அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு என்ற சாதனையை இந்தியா எட்டிப்பிடிக்கும்.