“சித்தன் போக்கு சிவன் போக்கு” என்ற சொல் பழக்கத்திலே இருக்கிறது. 18 சித்தர்களில் கடுவெளி சித்தர் என்பவரும் ஒருவர். இவர் திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கினார். இறைவனை பேரொளியாய் கண்டு பேரின்பம் பெற்றதால், இவரது பாடல்கள் “ஆனந்தகளிப்பு” என்னும் பெயரும் பெற்றிருப்பது சிறப்பாகும்.கடுவெளிகடு என்றால் பெரிய, வெளி – பரந்த வெட்டவெளி அல்லது பிரம்மா என்பதன் பொருள். கடுவெளி சித்தர் வெறுமையான வெட்ட வெளியைப் பார்த்து கொண்டே தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.
“சூனியத்தை தியானித்து சிவன் அருள் பெற்றதால், கடுவெளி சித்தர் என்று அழைக்கப்பட்டார். சித்தரின் உண்மையான பெயர் தெரியவில்லை. பிரபஞ்சத்தை அறிய வெட்டவெளியில் அமர்ந்து நமச்சிவாய என்ற மந்திரத்தை ஜெபித்த நேரத்தில் பரமானந்தம் அடைந்து ஆத்மா அனுபவத்தை இவர் பெற்றார். தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்தார். இத்தலத்தில் சிவபெருமானை “பரமானந்தர்” என்றே அழைக்கப்பட்டார்.
சிவனோடு உறையும் சக்தியான அம்பிகையை “வாலைக்குமரி”யாக போற்றி வழிபட்டார்.இவருடைய கருத்துகள் மக்களை நல்வழிப்படுத்தவும், தவறைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதே இல்லை. கடுந்தவம் செய்வதாலும், தான தர்மங்களைச் செய்வதன் மூலம் இறைவனை அடைய முடியும் என்று தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார். மனிதனிடம் காணப்படும் கோபம், சாபம், பாவம், பிறப்பு, இறப்பு, அறம் போன்ற செய்திகள் யாவையும், மக்களுக்கு சந்தநயத்துடன் கூடிய பாடல்களை வழங்கி உள்ளார்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!’’
நான்கு வரிகளில் நுட்பமான கருத்துகளை மக்களுக்கு தெரிவிக்கிறார். இப்பாடலை பாடாதவரும் கேளாதவரும் யாருமே இருக்க முடியாது எனலாம். நந்தவனம் என்பது ஓர் உலகம். ஆண்டி என்பவன் ஓர்ஆன்மா. 4+6=10 மாதங்களில் தாயின் வயிற்றில் கருவறை இருக்கிறோம். இறைவனின் கருணைக் கடாட்சியத்தினால் மனிதனாக பிறக்கிறான். ஆண்டி ஒருவன் 10 மாதங்களாக குயவனிடம் வேண்டி இலவசமாக ஒரு மண் பானையைப் பெற்றான்.
பானையின் தன்மை அறியாமல் சந்தோஷ மிகுதியால் தலையில் வைத்து ஆடி பாடி கீழே போட்டு உடைத்தான். நாம் உலகத்தில் பிறந்ததின் அருமை தெரியாமல் இன்ப துன்பங்களில் சிக்கி வீணே காலத்தைக் கழிக்கிறோம். ஓ! மனிதனே, பிறப்பின் அருமையை அறியாதவர்களே! இறைவனை அடைவதற்கே இவ்வுடம்பு. சிற்றின்பத்திற்காக அல்ல. பேரின்பம் அடைந்து, முக்தியை பெறுவாய் என்கின்ற தத்துவத்தை எடுத்து உரைக்கிறார்.
“பாவம் செய்யாதிருக்க
பாவம் செய்யாதிரு மனமே – நாளைக்
கோபம் செய்யாதே எமன்
கொண்டாடிப் போவான்
பாவம் செய்யாதிரு மனமே’’
மனித நெஞ்சே! நீ பிறருடைய மனம் நொந்து வருந்தும்படி தீவினை செய்யாதே, உன்னைக் காத்துக் கொண்டு வாழ வேண்டும். ஏனென்றால், நாளை உன் மேல் சினம் கொண்டு எமன் வந்து உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி விடுவான். இப்பொழுதே உனக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன். யாருடைய மனதையும் வறுத்தாதே பாவமும் செய்யாதே என்ற வரிகள் அடுத்தவரின் மனதைக் கெடுக்காமல் நீயும் தீவினையில் அகப்படாமல் அமைதியாக இரு என்று சுட்டிக் காட்டுகிறார்.
நிலையாமை
“நீர் மேல் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார் மீதில் மெத்தவும் நேயம் சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணும் அபாயம்’’
மனித உடம்பு நீரில் தோன்றி அழியும் நீர்குமிழி போன்றது. இது ஒரு மாயக் காட்சி. இந்த உண்மையை நீ அறிந்து கொண்டால், உலகப் பொருள்கள் மீது பற்று வைக்க மாட்டாய். நிலையாமையை அறிந்து கொள். எதன் மீதும் பற்று வைக்காதே அப்பொழுது உன் வாழ்வில் என்றும் அபாயம் தோன்றாது என்கிறார்.
“ஐந்து பேர் சூழ்ந்திருங் காடு – இந்த
ஐவருக்கும் ஐந்து அடைந்திடும் நாடு
முந்தி வருந்தி நீ தேடு – அந்த
மூலம்அறிந்திட வா முத்தி வீடு’’
ஓ மனிதனே! சவத்தை (உடம்பு) எடுத்துச் செல்லும் நாலுபேருடன் ஐந்தாவது சூழ்ந்திருக்கும் காடு அது சூடு காடு என்பதை நீ உணர வேண்டும். ஐம்பூதங்கள் (நீர் நிலம் காற்று தீ ஆகாயம்) உடன் வாழ்கின்றோம். ஐம்புலன்கள் ஆகிய (மெய், வாய், கண், செவி, மூக்கு) ஒரு காடாகும். இந்த ஐந்து பேருக்கும் ஊறு சுவை ஒளி மனம் ஓசை ஆகிய அறிவுகள் உண்டு இவையே வாழும் ஒரு நாடாகும். காட்டிலும், நாட்டிலும் வாழும் மனிதனே! நீ மாய உலகத்தில் இருந்து விடுபட்டு இறப்பதற்கு முன்பாகவே இறைவனின் அருளை பெறத் தேடு, அப்பொழுது முக்தியைப் பெற்று வீடுபேறு அடைவாய். அதுவே உண்மையான பேரின்பமாகும் என்று உரைக்கிறார்.
எதை வெல்ல வேண்டும்
“உள்ளாக நாலு வகை கோட்டை – பகை
ஓட பிடித்தால் ஆடலாம் நாட்டை
கள்ளப் புல என்னும் பாட்டை – வெட்டிக்
கனலிட்டு எரித்திட்டாற் காணலாம் வீட்டை.
உடல், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய நான்கு வகையானக் கோட்டைகள், இவையே, ஒவ்வொரு மனிதன் உள்ளத்தையும் ஆட்டிப் படைக்கிறது. இந்த நான்கு கோட்டைகளைக் கடந்து சென்றால் ஆன்மாவை அடையலாம். அதுதான் இறைவன் வாழும் உலகம் தோன்றும். இந்த உண்மையைக் கட்புலன்களால் அறிவதில்லை. நான்கு கோட்டைகளை வெட்டி சாய்த்து எரித்து உள்ளே புகுந்தால், நாம் மெய் வீடான சிவனுடைய ஜோதியை கண்டு முக்தியை அடையலாம் என்று இறைவனை அடையும் வழியை நமக்கு எடுத்துரைக்கிறார்.
“சாபம் கொடுத்திடலாமோ விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ
கோபம் தொடுத்திடலாமோ – இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ’’
ஓ மனிதனே! உன் மனம் வருந்தும்படி தீமை செய்தவர்களுக்கும் சாபம் கொடுக்காதே, விதியை நம்மால் தடுக்க முடியாது அல்லவா? கோபம் பலவீனத்தின் அடையாளம். அதை உன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திரு. பிறரது ஆசை தூண்டுகின்ற எண்ணத்தைத் தூண்டாதே அது ஒரு பாவச் செயலாகும் என்கிறார்.கல் மூன்று துண்டுகளாக பிளந்தது திருஇரும்பை (விழுப்புரம்) மகா காலேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை நினைத்து ஆலமரத்தடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தார்.
அப்பொழுது நாட்டில் கொடிய பஞ்சம் நிலவியது. சோழ மன்னர் ஒருவர் இப்பகுதியை ஆண்டு வந்தார், அச்சமயம் பஞ்சம் வந்தது. மக்களை எப்படி காப்பாற்றுவது என்று தன் அமைச்சர்களிடம்கூடி பேசினர். அக்கணம் அரசவை குல குரு வருகிறார். அவர் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து கவனித்த பொழுது பஞ்சத்திற்கானக் காரணம் சித்தர் ஒருவர், சிவபெருமானை விடாது தியானம் செய்கிறார். அதனால் பூமி உஷ்ணம் ஏற்பட்டது. மண் வறட்சி அடைந்தது. நல்ல மழை பொழியாமல் பஞ்சம் தலைத்தூக்கியது என்று எடுத்துக் கூறினார். “சித்தரின் தவத்தைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?” என்று மன்னர் கேட்டார்.
குலகுரு சற்று நேரம் கண்களை மூடி சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். தெய்வத்தினிடம் பிராத்தனை செய்து மன்னரை நோக்கினார். “மன்னா! முனிவரின் தவம் கலைய வேண்டுமெனில் அதற்கு ஓர் உபாயம் கூறுகிறேன். அதன்படி செய்தால் நாட்டில் சுபிட்சம் ஏற்படும்” என்றுகூறி அவ்விடம் விட்டு நகர்ந்தார்.மன்னன், முனிவர் கூறியபடியே தன் அமைச்சரிடம் தேவதாசியை அழைத்து வரச் செய்தார்.
அவளிடம் முனிவரின் தவத்தை நிறுத்த நடனம் ஆட வேண்டும் என ஆணையிட்டார். பெண்மணியும் முனிவர் முன் சென்று நடனம் ஆடினாள். முனிவர் தவத்திற்கு இடையூறாக அமைதியை இழந்தார். கண்களைத் திறந்தார். எதிர்பட்ட மன்னர்;“சித்தரே! நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது நீங்கள் பஞ்சம் நீங்க உபாயம் செய்ய வேண்டும்” என்று கேட்டார். மக்கள் நலனையே தன் நலனாக எண்ணியவர், தவத்தை கைவிட்டார். சிவபெருமானை எண்ணி ஒரு பாடலைப் பாடினார். அடுத்த கணம் மழை பொழிந்தது. பஞ்சம் அகன்றது. வறுமை நீங்கியது. மனம் மகிழ்ந்தார் மன்னர். சித்தரை வணங்கி திரும்பினார்.
சிவபெருமானுக்கு உற்சவம் நடைபெற்றது. மக்கள் மகிழ்ச்சியில் திளைந்திருந்தனர். வீதி உலாவில் எழுந்தருளிய சிவபெருமான் முன் நடனமாடும் பெண்ணைக் கண்டார். அவள் தன் தவத்தைக் கலைக்க வந்தவள் என்பதை அறிந்தார். மெய்மறந்து ஆடியவளின் காற்சிலம்பு கழன்று கீழே விழுந்தது. சிவனை மகிழ்விக்க ஆடியவளின் சிலம்பு விழுந்ததும், தானே எடுத்து அவளுக்கு அணிவித்தார்.
மக்கள் அனைவரும் கேலியாக சிரித்தனர். மன்னன் சினம் அடைந்தார். மக்களும் மன்னரும் தவறாக தன்னைக் கருதியதாக எண்ணியதும் தன் நல்லெண்ணத்தை அறியாத இவர்களுக்காக எவ்வளவு செய்தோம், தம்மை கீழ்த்தரமாக எடை போட்டு விட்டனரே என்று பதறினார். கடுவெளி சித்தர் சிவபெருமானை நோக்கி ஒரு பாடல் பாடினார். அடுத்த கணம் சிவபெருமான் லிங்கத்தை மூன்று துண்டுகளாகப் பிளந்து கொண்டு காட்சியளித்தார். இக்காட்சியைக் கண்ட மக்களும், மன்னரும் தங்கள் தவறை உணர்ந்து சித்தரின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
குழந்தை பாக்கியம் அருளுபவர்
மக்கள் கடுவெளி சித்தரை, பிள்ளை வரம் வழங்கும் தெய்வமாகவே எண்ணி வணங்குகின்றனர். தாய்மைப் பேற்றை அடைய, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று சித்தருக்கு யாகம் வளர்த்து, அபிஷேகம் செய்து, புஷ்பங்களால் அலங்கரித்து தீபமேற்றி வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும் என்று மக்கள் நினைக்கும் ஐதீகம் இங்குள்ளது.
ஆகாசபுரீஸ்வரர் கோயில்
இவர் பூராட நட்சத்திரத்தில் பிறந்ததால், பூராட நட்சத்திரம் உள்ளவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதால் வாழ்வில் சோதனைகளும் துயரங்களும் நீங்கி இவரின் அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ்வர்.
மோட்ச தீபம்
கடுவெளி சித்தர் சூரிய கிரகத்திற்கு உரியவர். சூரியனை ஆத்மகாரகன், பிதுர்காரகன் என்பார்கள். ஒருவரின் ஜாதகத்தில் கிரக தோஷத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு, இவரை வணங்கினால் தோஷம் விலகும். முப்பிறவி பாவங்களும், பித்ரு சாபங்களும் அடியோடு நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
கடுவெளி சித்தர் இயற்றிய நூல்கள்
கடுவெளி சித்தர் பாடல் ஆனந்த களிப்பு (35) பாடல்கள் உள்ளன. வாதவைத்தியம், பஞ்ச சாஸ்திரம் என்பன.
நேத்தி கடன்
சிவபெருமானுக்கு ஜவ்வாது சாத்தி கேசரி நைவேத்தியம் செய்து வணங்கினால் எண்ணியது திண்ணியமாக ஈடேறும்.
சித்தர் சமாதியான இடங்கள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் எடையூர் சங்கேந்தி கடைவீதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
சமாதியில் சிறிய அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடும்போது அதன் வெளிச்சம் தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது பெரிதாக தெரியும். அர்ச்சகர் சங்கு ஊதி பூஜை செய்கிறார். அந்த நேரத்தில் ஜீவசமாதி அருகே நின்று கொண்டிருக்கும் நாய் (பைரவர்) ஊ..ஊ..ஊ என்று சங்கு ஊதுவது போல ஒளி எழுப்பி சித்தரை வணங்கும்.
இது ஓர் அதிசயநிகழ்வு. கடுவெளி சித்தர் சமாதியில் இருந்து மக்களைக் காப்பாற்றுகின்றார் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். காஞ்சிபுரம் தர்காவிற்கு பின்புறம் ஜீவசமாதி உள்ளது. அவருக்கு இன்றும் தினசரி பூஜைகளும், பிரதோஷம் ஆகிய நாள்களில் வழிபாடும் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி போவது: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் சித்தரின் சமாதி உள்ளது. ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து மிகமிக அருகில்.
பொன்முகரியன்