*அகற்ற கோரிக்கை
வருசநாடு : கடமலை- மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, பெரியகுளம், செங்குளம், கெங்கன்குளம், கோவிலாங்குளம், கடமான்குளம், சிறுகுளம், கோவில்பாறை, சாந்தநேரி உள்ளிட்ட பகுதிகளில் 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய்களினால் இப்பகுதி நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டத்திற்கும் ஆதாரமாக உள்ளது.
இந்த கண்மாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, இலவமரம், கொட்டை முந்திரி மரங்களை நட்டு வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள சில கண்மாய்கள் அரசு சார்பில் தூர்வாரி, கரை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. ஆனால், கண்மாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வாரி கரைகளை விரைந்து பலப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே குடிநீர் பஞ்சம் எப்போதும் வராது. இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.