சாயல்குடி: கடலாடியில் முஸ்லிம்கள், இந்துக்கள் இணைந்து மதநல்லிணக்க மொகரம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். இதில் இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். இப்பகுதி மக்கள் மீது அதிக பாசம் கொண்ட இவர் பல நீர்நிலைகளை உருவாக்கியுள்ளார். விவசாய நிலங்களை மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பிறகு ஆண்டுதோறும் அவரது நினைவாக மொகரம் பண்டிகையை முன்னிட்டு 11 நாள் பூக்குழி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவை முஸ்லிம்கள் – இந்துக்கள் இணைந்து கொண்டாடுவது சிறப்பு. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஜூன் 27ம் தேதி தொடங்கியது. விழாவின் கடைசி நாளான நேற்றிரவு சிறப்பு புகழ்மாலை ஓதப்பட்டது. இதையடுத்து முஸ்லிம்கள் – இந்துக்கள் இணைந்து சடங்குகளை நிறைவேற்றினர். பின்னர், இன்று அதிகாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்துக்கள் பூக்குழி இறங்கினர். முஸ்லிம்கள் கொண்டாடும் மொகரம் பண்டிகையில் இந்துக்கள் பூக்குழி இறங்கியது மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக அமைந்தது.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், `இந்த விழாவிற்காக கடந்த 11 நாட்கள் விரதம் இருந்துள்ளோம். கடலாடி மங்கள விநாயகர் கோயில் அருகே உலோகத்தினாலான பிறை, கை உருவம் ஒன்றை வைத்து வழிபாடு செய்து வருகிறோம். விழாவின் 7 மற்றும் 11ஆம் நாட்களில் அத்தி மரத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை ஊர்வலமாக எடுத்து வருவோம். அப்போது இந்து கோயில்களில் வரவேற்பு அளிக்கப்படும். அவர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை வழங்கப்படும். பூக்குழி திடலில் இந்து முறைப்படி சடங்குகள் நிறைவேற்றப்படும். பிறகு சிறப்பு புகழ்மாலை(மவூலீது) ஓதப்பட்டு சிறப்பு தொலுகை செய்து பூக்குழி இறங்குவோம். அதன்படி இந்த ஆண்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்வாறு தெரிவித்தனர். இந்த விழாவில் பெண்கள் தங்களது தலையில் தீக்கங்குகளை கொட்ட செய்து நூதன முறையில் வேண்டுதலை நிறைவேற்றினர். இதனால் விவசாயம் செழித்து, பொதுமக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
விவசாயம் செழிக்க நூதன வழிபாடு: பூக்குழி விழாவையொட்டி வீடுகளில் தயாரிக்கப்பட்ட புளி, இனிப்பு, ஏலக்காய், சுக்கு கலந்த பானகரம் தயாரித்து `மது குடம்’ என பாவித்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், பச்சரிசி, சர்க்கரை கலந்து தயாரித்த ரொட்டியை சேர்த்து மண் குடுவையில் அடைத்து, அதனை பூக்குழி நடைபெற்ற இடத்தில் புதைத்து வைக்கப்படுகிறது. இதனை அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் வைத்து வழிபாடு செய்து, பிரசாதமாக சாப்பிடுவது வழக்கம். இவ்வாறு புதைக்கப்படும் மண் குடுவையில் தேள், நண்டு இருந்தால் அந்தாண்டு விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.