சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்று திமுக தலைவர் கூறியிருக்கிறார். சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தான் திமுக தலைவர் குறிப்பிடுகிறார். கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராடாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் மாநில அரசினைக் கண்டிக்காமல், ஒன்றிய அரசை மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்தான் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.