வருசநாடு : தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக புணரமைக்கப்படாதால் அதன் மேற்கூரைகள் சேதமடைந்து, கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதனால் இங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்தில் பணியாற்றி வந்தனர். இதனால் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் பழுதடைந்து கிடக்கும் மயிலாடும்பாறை ஊராட்சி நிர்வாக கட்டிடத்தை மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து பழைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது. கட்டுமான பணிகளை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, தங்கபாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘‘மயிலாடும்பாறையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய கட்டிடம் பழுதடைந்து மேற்கூரை சேதமடைந்திருந்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை விரைவில் கட்டி கொடுக்க வேண்டும் எனவும் தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்த தினகரன் நாளிதழுக்கும் கிராம பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.