சென்னை: கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூத்த அரசியல் தலைவர்; பல தேசியத் தலைவர்களின் அன்புக்குரியவர். இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்து வரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்அவர்களுக்கு இவ்விருது வழங்குவது மிகவும் பொருத்தமானது. தகைசால் தமிழர் விருது வழங்க தெரிவு செய்யும் குழுவினருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.