இந்திய தீபகற்பத்தின் மிக நுனியில் ராமேஸ்வரம் உள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் புகழ் பெற்ற ராமநாதர் ஆலயம் உள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில், தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஆலயம் இது. இங்குள்ள சுயம்பு மூர்த்தியான இறைவனுக்கு கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கம். இந்தத் தலத்தில் மட்டும், கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம். இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து பாம்பன் தீவில் பிரிந்து கிடக்கும் ராமேஸ்வரம், பிரம்மாண்டமான பாம்பன் பாலத்தால் நிலப் பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் புராணப் பெயர், “கந்தமாதன பர்வதம்’’. கம்பீரமான அமைப்பு, கம்பீரமான கோபுரங்கள், சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் தாழ்வாரங்கள் என வியப்பினை தரும் இந்த ஆலயம் கட்டிடக்கலை, அதிசயமாக உள்ளது. பிரதான மூர்த்தி லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். சுமார் 17.5 அடி உயரமுள்ள பெரிய சிலையான நந்தி சிலையும் உள்ளது. அம்பாளின் திருநாமம் பர்வதவர்தினி. விசாலாட்சி, விநாயகர் மற்றும் சுப்ரமணியர், பெருமாள் ஆகியோருக்கு தனி சந்நதிகள் உள்ளன. இதன் விசாலமான பிரகாரம் போல் வேறு எங்கும் இல்லை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது.
ராமர் பூஜை செய்த லிங்கம்
இந்தத் தலமும் இந்திய இதிகாசமான ராமாயணத் தொடர்புடையது. ராமர், இலங்கை அரசன் ராவணனைக் கொன்ற பிறகு, பிராயச்சித்தத்தின் ஒரு பகுதியாக சிவபெருமானை வழிபட விரும்பியதாகவும், அதற்காக காசியில் இருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனிடம் கேட்டதாகவும், அனுமான் திரும்பி வரத் தாமதமான போது, சீதாதேவி மணலைக் கொண்டு சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை ராமர் பூஜை செய்தார் என்று இந்த தலத்தின் வரலாறு பேசுகிறது. ராமர் பூஜித்த லிங்கம் “ராமலிங்கம்’’ என்று அழைக்கப்படும். அனுமன் கொண்டு வந்த லிங்கம் “விஸ்வலிங்கம்’’ என்று அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் (புனித நீர்நிலைகள்) உள்ளன. அங்கு பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்க நீராடுவர்.
காசியும் ராமேஸ்வரமும்
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள், முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக் கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிஷேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இங்கு சிவன் சந்நதியில், பெருமாள் கோயிலுக்குரிய தீர்த்தம் வழங்கப்படுவது சிறப்பு.
கோயில் அமைப்பு
இக்கோயில் நான்கு பெரிய மதில் களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது, கிழக்கு கோபுரத்தை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேதுபதி மன்னரின் முதலமைச்சர் முத்திருளப்பபிள்ளையால் கட்டப்பட்டது. உலகிலேயே நீளமான பிராகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிராகாரங்களின் நீளம் தனித் தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப் பிராகாரங்களின் நீளம் தனித் தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிராகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிராகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப் பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.ராமேஸ்வரத்தில், காசி விஸ்வநாதர் சந்நதியை வணங்கிய பிறகுதான், ராமநாதன் சந்நதிக்குச் செல்ல வேண்டும். காசியில் விஸ்வநாதர் சந்நதி தண்ணீர் நிரம்பக்கூடிய தொட்டி போன்ற அமைப்பில் இருக்கிறது. இங்கு விஸ்வநாதர் கருவறை, நீர் விட்டு நிரப்பும் அமைப்பு கொண்டதாக இருக்கிறது. காசி விஸ்வநாதர் இருக்கும் அன்னை விசாலாட்சிக்கு முதல் பூஜை நிகழ்ந்த பின்தான் ராமநாதருக்கு நடைபெறும். ராமநாதரின் அதி காலை அபிஷேகத்தின் போது சுவாமிக்கு முன்னால் மரகத ஸ்படிக லிங்கத்தை வைத்து அபிஷேகம் செய்வார்கள். அதன் வழியே மூலவரை தரிசிப்பது விசேஷம்.
மூர்த்திகள் பிற சிறப்புக்கள்
இக்கோயிலில் மூன்று பிராகாரங்கள். மூன்றாம் பிராகாரமான வெளிப் பிராகாரத்திலேதான் பெரிய நடராஜரது வடிவம் ஒன்றும் இருக்கிறது. உள் பிராகாரத்தில்தான் ராமலிங்கர் கோயில் கொண்டிருக்கிறார். அங்குள்ள நவசக்தி மண்டபம் நல்ல வேலைப்பாடு உடையது. அந்த பிராகாரத்திலேதான் பர்வதவர்த்தினி அம்பிகையின் சந்நதி. அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ சக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும். அம்பிகைக்கு, சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சந்நதி பிராகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிஷேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.அம்பாள் சந்நதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். முதல் பிராகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சந்நதி அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராசர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோச நிவர்த்திக்காகவும் இந்த சந்நதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ரலிங்க சந்நதிகள் அமைந்துள்ளது. விவேகானந்தர் 27 ஜனவரி 1897ல், ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து, ராமநாத சுவாமியை வணங்கி ஆற்றிய சொற்பொழிவில், அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. எனவே, உடல் மற்றும் மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார் என்றார்.
அக்னி தீர்த்தம்
ராமநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 23 தீர்த்தங்களுள், அக்னி தீர்த்தமும் ஒன்றாகும். ராமநாத சுவாமி திருக்கோயிலின் நேர் கிழக்கே வங்காள விரிகுடா கடலினுள் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானோர் நீராடுகின்றனர். ராமேஸ்வரம் தீவின் தென் கோடியான தனுஸ்கோடியின் கிழக்கு கடற்கரைப் பகுதியே புராணங்களில் அக்னி தீர்த்தமாகக் கூறப்பட்டுள்ளது. இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. இங்கிருந்து நீரை எடுத்து ஆதிசங்கரர் தற்போதுள்ள அக்னி தீர்த்தத்தில் பிரதிட்டை செய்தார். சேது புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் நாரத புராணங்களில் அக்னி தீர்த்தத்தை குறித்துள்ளது அருகிலுள்ள வேறு தீர்த்தங்கள் தேவிப்பட்டினம், பாம்பன், தங்கச்சிமடம், திருப்புல்லாணி முதலிய இடங்களில் உள்ளன.
வேறு கோயில்கள்
ராமேஸ்வரத்தை விட்டு கிளம்புமுன் பார்க்க வேண்டியவை கந்தமாதன பர்வதம்; ஏகாந்த ராமர் கோயில், நம்பி நாயகி அம்மன் கோயில் ஆகியவைகளும் பிரசித்தி பெற்றவை. கந்தமாதன பர்வதம் வடமேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு அனுமார் தாவினார் என்று கூறப்படுகிறது. ஏகாந்த ராமர் கோயில் ராமேஸ்வரத்துக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் தங்கச்சி மடம் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கிறது. இங்கு ராமர் சீதையுடன் பேசிக் கொண்டிருக்கும் பாவனையில் சிலைகள் அமைத்திருக்கிறார்கள். ராமர் இங்குதான் தமது மந்திராலோசனையை நடத்தினார் என்பர். ராமேஸ்வரத்துக்குத் தெற்கே இரண்டு மைல் தூரத்திலுள்ள நம்பி நாயகி அம்மன் நம்பிக்கையுடன் ஆராதிப்பவர்களுக்கெல்லாம் அருளுபவள் என்பது நம்பிக்கை, இன்னும் சீதா குண்டம், வில்லூரணி தீர்த்தம், கோதண்டராமசுவாமி கோயில் எல்லாம் சென்று வணங்குவது சிறப்பு. அப்போதுதான் ராமேஸ்வர புனித யாத்திரை நிறைவடையும். ராமேஸ்வரம் மண்டித்தெரு பகுதியில் அமைந்துள்ள பிரம்மகுமாரி ஆன்மிக அருங்காட்சியகத்தில், 12 ஜோதிர் லிங்கங்களையும் தரிசனம் செய்யும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. சிலரால் நாடு முழுவதும் சென்று இந்த 12 லிங்கங்களையும் பார்த்து தரிசனம் செய்ய முடியாது.இந்த அருங்காட்சியகமானது, பக்தர்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க காலை 7:00 மணிக்கு திறந்து மதியம் 12:00 மணிவரையிலும், மாலை 4:00 மணிக்கு திறந்து இரவு 8:00 மணிவரையிலும் திறந்திருக்கும், இங்கு செல்ல அனுமதிஇலவசம்.
முக்கிய விழாக்கள்
* மகாசிவராத்திரி.
* மார்கழி திருவாதிரை.
* பங்குனி உத்திரம்.
* திருக்கார்த்திகை.
* ஆடி அமாவாசை.
* தை அமாவாசை.
* மகாளய அமாவாசை.
கோயில் நேரம்
கோயில் காலை 4 மணி முதல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 8.30 வரை திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது?
ராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 168 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரை, சென்னை, திருச்சி போன்ற எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து வசதி உண்டு. ராமேஸ்வரம், இந்தியாவின் எல்லா ஊர்களிலிருந்தும் ரயில் மூலம் நேரடியாக ராமேஸ்வரம் வரலாம். ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் ஆலயம் உள்ளது. தங்குவதற்கு நல்ல விடுதிகள் உள்ளன.
முனைவர் ஸ்ரீ ராம்