சென்னை: சிவகங்கையில் காவல்துறையின் அத்துமீறலால் உயிரிழந்த அஜித் குமாருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். கடந்த 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகளுக்கு உதவுவதற்காகச் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து உதவியுள்ளார் அஜித் குமார். அவர்கள் வந்த வாகனத்தின் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்து வேறு இடத்தில் நிறுத்தும்படி உதவி கோரி உள்ளனர் தாயும் மகளும்.
வாகனம் ஓட்டத் தெரியாத அஜித்குமார் நண்பர்கள் உதவியுடன் வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி இருக்கிறார். வழிபாடு முடிந்து திரும்பி வந்தவுடன் தாயும் மகளும் வாகனத்தை எடுத்துச் சென்று இருக்கின்றனர். இந்நிலையில் மதியம் 2 மணியளவில் காவல் நிலையம் வந்த அந்தப் பெண்கள் தம் பரசில் வைத்திருந்த ரூபாய் 2500 மற்றும் 10 பவுன் நகை காணவில்லை என்ற வாய்மொழி புகாரைத் தெரிவித்திருக்கின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் அஜித்குமாரை ஆய்வாளரும் சார்பாய்வாளரும் விசாரித்து மானாமதுரையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளரின் சிறப்புப் படையிடம் ஒப்படைத்துள்ளனர்.
அஜித் குமார் அவரின் தம்பி நவீன் குமார் காரை நிறுத்த உதவிய நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை விசாரணைக்காகக் கூட்டிச் சென்று மூன்று நாட்கள் கடுமையாகச் சித்ரவதை செய்து காவல்துறை விசாரணை செய்துள்ளனர். ஜூன் 28 ஆம் தேதி மாலை 7 மணி அளவில் அஜித்குமாரின் சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வருவதைக் கண்டு கோயில் நிர்வாகத்திடம் காவலர்கள் அவரை ஒப்படைத்துச் சென்றிருக்கின்றனர். கோயில் நிர்வாகத்தினர் அஜித் குமாரை ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்கள் இவரின் நிலையைக் கண்டு அனுமதிக்க மறுக்கவே அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கின்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 29ஆம் தேதி மாலை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. திருபுவனம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து அஜித் குமாரை விசாரித்தது வரை காவல்துறையின் அத்துமீறல்கள் அப்பட்டமாகத் தெரிய வருகிறது. காவல்துறை சித்திரவதையின் காரணமாக மரணம் நிகழ்வது கடும் கண்டனத்துக்குரியது. கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ள காவலர்களைப் பணி இடைநீக்கம் செய்வது மட்டும் போதுமானது அல்ல. அவர்களைக் கைது செய்து கொலைக் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ளாத வகையில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.