டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை திமுக எம்.பி. பி.வில்சன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குழு கபில் சிபல் தலைமையில் மாநிலங்களவை செயலாளரிடம் சமர்பித்துள்ளது. தீர்மானத்தை தாக்கல் செய்ய 50 எம்.பிக்களின் தேவை உள்ள நிலையில் 55 மாநிலங்களவை எம்.பிக்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் விஸ்வ இந்து பரிக்சத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியதற்கு எதிரிப்பு தெரிவித்து இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அவரது பேச்சு சிறுபான்மை சமூகங்களைக் நேரடியாக குறிவைப்பதாகவும் அவர்கள் மீது தப்பெண்ணத்தையும் வெறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவரது பதவிபிராமண உறுதி மொழியையும் அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை பண்பையும் மீறிவிட்டததாகவும் தீர்மானம் குறிப்பிடுகிறது.
இதுபோன்ற பிளவுவாத, பாரபட்சமான கருத்துக்களைக் கூறியதன் மூலம் மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை நீதிபதி சேகர் சீர்குலைத்துள்ளார் எனத் தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 124 (4), 124 (5), 218, ஆகியவை நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாகவும், நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டால் அவர்களைப் பதவிநீக்க வழிவகை செய்கின்றன.
நீதிபதி சேகர் குமார் யாதவ் மீது உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் அறிக்கை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.