சென்னை: இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் காலியாக உள்ள 31 இடத்துக்கான கணினி வழி தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வை 9152 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் காலியாக உள்ள 31 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளியிட்டது. தேர்வுக்கு விணப்பிக்க மே 26ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 9,163 பேர் விண்ணப்பித்தனர். இதில் தேர்வு எழுத 9,152 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆண்கள் 4,099 பேர், பெண்கள் 5053 அடங்குவர். இவர்களுக்கான கணினி வழித்தேர்வு நாளை(23ம் தேதி) நடக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. முதள் தாள் தேர்வு(முதுநிலை பட்டப்படிப்பு தரம்) 200 வினாக்கள் கேட்கப்படும். பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. அதாவது, கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு(10ம் வகுப்பு தரம்), பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. இத்தேர்வு 31 மையங்களில் 46 தேர்வு கூடங்களில் நடக்கிறது. சென்னையை பொறுத்தவரை 3 இடங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 1784 பேர் பேர் எழுதுகின்றனர்.