Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

இளநிலை நீட் தேர்வு நாளை தொடங்குகிறது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் இல்லை: தேர்வு எழுதுவோர் வருத்தம்

சென்னை: 2025-26ம் கல்வியாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் சிறிய பரப்பளவு கொண்ட 7 மாவட்டங்களில் வழக்கம்போல் தேர்வு மையங்கள் இல்லை என தேர்வர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது. இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது.

தலை முடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் சிறிய பரப்பளவு கொண்ட தேனி, பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் வழக்கம்போல் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. அதன் மாணவர்கள் அருகே உள்ள நகரங்களில் தேர்வு எழுதுகிறார்கள். எனவே, மாணவர்கள் நலன் கருதி இந்த 7 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்க என்டிஏ முன்வர வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.