சுஹல்: ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஜெர்மனியின் சுஹல் நகரில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) நடத்தும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. கடைசி நாளான நேற்று முன்தினம், 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி, 31/50 என்ற புள்ளிக் கணக்கில் சிறப்பாக சுட்டு தங்கப் பதக்கம் வென்றார்.
இப்போட்டியில் பெலாரசை சேர்ந்த அலினா நெஸ்ட்சியாரோவிச் 29/50 என்ற புள்ளிக் கணக்கில் சுட்டு 2ம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ஹங்கேரி வீராங்கனை மிரியம் ஜாகோவுக்கு வெண்கலம் கிடைத்தது. இப்போட்டிகளில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. சீனா, 3 தங்கம், ஒரு வெண்கலத்துடன் இரண்டாம் இடம் பெற்றது.