ரொசாரியோ: உருகுவே அணிக்கு எதிரான சர்வதேச மகளிர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில், இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே ஆகிய நான்கு நாடுகளை சேர்ந்த ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிகள் பங்கேற்கும் சர்வதேச ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த 4 போட்டிகளில், இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்திருந்தது.
இந்நிலையில், உருகுவே அணியுடன் நேற்று இந்திய அணி மோதியது. இப்போட்டியின் 10வது நிமிடத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹினா, 24வது நிமிடத்தில் லால்ரின்புய் ஆகியோர் கோல்கள் அடித்தனர். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் உருகுவே அணியின் இனெஸ் டி பொஸாடஸ், மிலாக்ரஸ் செய்கல் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்ததால், போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த ஷூட் அவுட் ஆட்டத்தில், இந்திய வீராங்கனைகள் கீதா, கனிகா, லால்தான்ட்லுவாகி ஆகியோர் தொடர் கோல்கள் விளாசினர். உருகுவே அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. அதனால், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்திய அணி, போட்டியை நடத்தும் அர்ஜென்டினா அணியுடன் அடுத்த போட்டியில் மோதவுள்ளது.