சென்னை: பக்ரீத் மற்றும் வாரவிடுமுறையையொட்டி கடந்த ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை 12.30 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு முன்பதிவு அடிப்படையில் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4ம் தேதி தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு 73,480 பயணிகளும், 5ம் தேதி தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 622 பேருந்துகள் இயக்கப்பட்டு 96,690 பயணிகளும் மற்றும் 6ம் தேதி தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 798 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,06,205 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 3 நாளில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாளில் 24,831 முன்பதிவு செய்த பயணிகள் உட்பட 2,76,735 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து 94,926 முன்பதிவு இருக்கைகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வசதி அளித்துள்ள நிலையில் 26 சதவீதம் இருக்கைகள் மட்டுமே கடந்த மூன்று தினங்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து இருக்கையில் அதிகபட்சமாக 9 சதவீதம் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. தொலைதூர பயணம் மேற்கொள்ளளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்க வழிவகை செய்யப்படும். எனவே பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து எந்தவித சிரமமின்றி பயணம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.