திருச்செந்தூர்: தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் வருகின்ற ஜூலை 1ம்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நேற்று காலை சண்முகருக்கு யாகசாலைகள் அமைப்பதற்காக பூமிபூஜை, முகூர்த்தக் கால் நடும் விழா நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
ராஜகோபுரம் மேலவாசல் அருகே யாகசாலை அமைக்கப்பட உள்ள இடத்தில் பூஜை செய்யப்பட்ட முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் இளம்பகவத், கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் முகூர்த்தக் கால் நட்டனர்.