லண்டன்: நீதித்துறையில் வெளிப்படை தன்மை அவசியம் என்று இங்கிலாந்தில் நடந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார். இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த ‘நீதித்துறையின் நம்பகத்தன்மையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பேணுதல்’ என்ற மாநாட்டில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில், ‘நீதித்துறையில் ஊழல் அல்லது தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, நீதித்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரைவான, உறுதியான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் தேவை. எந்தவொரு அமைப்பும், எவ்வளவு வலுவாக இருந்தாலும், நிர்வாக ரீதியிலான தவறுகளுக்கு ஆளாகக்கூடும். நீதித்துறையிலும் ஊழல் மற்றும் தவறான நடத்தை நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இவை பொதுமக்களின் நம்பிக்கையை பாதித்து, முழு அமைப்பின் நேர்மையையே கேள்விக்குள்ளாக்குகிறது. இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் வெளிப்படும்போது, உச்ச நீதிமன்றம் உடனடியாகவும், தகுந்த முறையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய நீதித்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடுவது, அரசியல் சாசன அமர்வு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புவது, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை இலவசமாக அணுகக்கூடிய இ-எஸ்.சி.ஆர். இணையதளம் ஆகியன முக்கியமான விஷயங்களாகும்.
இவை சட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எளிதாக அணுகக் கூடியதாக உள்ளன’ என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கட்டுக்கட்டாக பணம் எரிக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்ற விசாரணைக் குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி, பதவி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள உள்ளார்.