புதுடெல்லி: டெல்லியில் மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவரது வீட்டில் இருந்து எரிந்த ரூபாய் நோட்டுக்கள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். மேலும் உச்சநீதிமன்ற நீதிபதி கன்னா, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக்கோரி குடியரசு தலைவர், பிரதமருக்கு பரிந்துரை கடிதம் எழுதி இருக்கிறார்.
இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், ‘‘மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி முடிவடைகின்றது. நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்படுமா அல்லது மாநிலங்களவையில் கொண்டு வரப்படுமா என்பது குறித்து ஒன்றிய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் கையொப்பம் தேவைப்படும். நிலங்களவையில் 50 எம்பிக்களின் கையொப்பம் தேவை. நீதிபதி பதவி நீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளன. தீர்மானம் எந்த அவையில் கொண்டு வரப்படும் என்பது குறித்து அரசு முடிவு செய்த பின்னர் எம்பிக்களின் கையொப்பம் சேகரிக்கப்படும்” என்றார்.