பல வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமை திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஞானானந்த தபோவனத்துக்கு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளை தரிசிக்கச் சென்றேன். எப்போதெல்லாம் மனதில் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் தபோவனத்தில் இருப்பேன். அப்படி ஒர் ஈர்ப்புச் சக்தி, அந்தத் தபோவன மண்ணுக்கு உண்டு. ஸ்வாமிகளை தரிசிக்க, அப்போது நீதிபதியாக இருந்த கிருஷ்ணசாமி ரெட்டியார் மற்றும் பலராமையா இருவரும் அன்றைய தினம் வந்திருந்தனர்.
அனைவரும் தங்குவதற்கு அறை ஒதுக்கி இருந்தனர். மதியம் எல்லோருமாகச் சமையல் கூடத்தில் அமர்ந்து உணவு அருந்தினோம். தபோவனத்தில், வேளாவேளைக்கு காபி, டிபன், சாப்பாடு எனக் குறைவில்லாமல் கூப்பிட்டுப் போடுவார்கள். ஸ்வாமிகளது உத்தரவு அப்படி! அன்று முழுவதும் ஸ்வாமிகளது தரிசனம் ஒருவருக்கும் கிடைக்கவில்லை. விசாரித்தோம்: ‘இரண்டு நாட்களாக ஸ்வாமிகள் தொடர்ந்து நிஷ்டையில் (தவம்) இருக்கிறார். எப்போது பகிர்முகப்படுவார் (நிஷ்டை கலைதல்) என்று சொல்லஇயலாது!’ என்று கூறினர்.
வழக்கமாக ஸ்வாமிகள் தனது காலை வேளை பூஜை, புனஸ்காரங்களை முடித்துவிட்டு, பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளிப்பது வழக்கம். அடுத்த நாள் சனிக்கிழமை அன்று காலை 7:30 மணி. நிஷ்டை கலையாததால், அன்று தீர்த்தப் பிரசாதம் அளிக்க வரவில்லை. வேறொருவர் கொடுத்தார். அங்கு காத்திருந்த பக்தர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்:
“ஸ்வாமிகள் எத்தனயோ தடவ அன்ன ஆகாரம் இல்லாம மாசக் கணக்காகூட நிஷ்டைல இருப்பார். அவரா நிஷ்ட கலைஞ்சு வந்தாத்தான் உண்டு!”
“அப்படின்னா, நாம ஸ்வாமிகளின் திருவுருவப் படத்துக்கு முன்னாடி நமஸ்காரம் பண்ணிட்டு உத்தரவு வாங்கிண்டு பொறப்பட வேண்டியதுதான்!” என்று வருத்தத்துடன் சொல்லிக் கிளம்பினார்கள் சிலர். அங்கு நின்றிருந்த நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், என்னிடம் சொன்னார்:
“எனக்கென்னவோ மனசுலே படறது சார்… நாளைக்குக் காலைல அந்த சித்த புருஷர் நிஷ்டை கலைஞ்சு வந்து, நமக்கெல்லாம் தரிசனமும், தீர்த்தப் பிரசாதமும் கொடுப்பார், பாருங்கள். அது சரி… நீங்க என்ன நெனைக்கிறீங்க?” நான் அவரிடம் பணிவோடு, “நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தேன். நீதிபதிகள் இருவரும் ரொம்பவும் சந்தோஷப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை. பொழுது விடிந்தது. காலைக் கடன்களைப் பூர்த்தி செய்து, ஸ்நானம் முடித்து அறையை விட்டு வெளியே வரும்போது, மணி சரியாக ஏழு. அங்கே நீதிபதிகள் இருவரும் பளிச்சென்று ஜிப்பா, வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து தபோவனத்தை வலம் வந்து கொண்டிருந்தனர்.
நானும் சேர்ந்து கொண்டேன். மணி 7:45. என்ன ஆச்சரியம்!தபோவன மகான் நிஷ்டை கலைந்து சாட்சாத்பரமேஸ்வரனைப் போன்ற தோற்றத்துடன் சந்நதியில் அமர்ந்து தீர்த்தப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்! நீதிபதிகள் இருவரும் பதினைந்து – இருபது பக்தர்களுக்குப் பின்னால் வரிசையில் நின்றிருந்தனர். இருவர் முகத்திலும் மகிழ்ச்சி நிலவியது. அடியேன் அவர்களுக்குப் பின்னால் நான்கு பேரைத் தாண்டி நின்றிருந்தேன்.
ஸ்வாமிகள் ஒவ்ெவாரு பக்தரிடம் பேசி, அவர்களது குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி மார்கக் கூறி, தீர்த்தப் பிரசாதம் அளித்து அனுப்பிக் கொண்டிருந்தார். நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், ஸ்வாமிகளுக்கு முன் சென்று, தன் வலது உள்ளங்கையைக் குழித்து நீட்டினார். அவ்வளவுதான்! தீர்த்தம் கொடுக்கும் வெள்ளி உத்தரணியை (சிறிய கரண்டி) சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டுவிட்டார் ஸ்வாமிகள்.
தனக்கு தீர்த்தப் பிரசாதம் அளிக்காமல் உத்தரணியை ஏன் பின்னுக்கு இழுத்துக் கொண்டுவிட்டார் என்ற மன குழப்பத்துடன், “ஸ்வாமி! எனக்கு தீர்த்தப் பரசாதம் அனுக்கிரகிக்கணும். அதுக்காகத்தான் இரண்டு நாள் காத்துண்டிருக்கோம்” என்று பவ்யமாகக் கூறினார். உடனே அந்த சித்த புருஷர் சிரித்துக் கொண்டே;
“அதுக்காக மாத்திரம் இரண்டு நாளா காத்திண்டிக்காப்ல தெரியலையே? வேற ஏதோ விஷயமும் இருக்காப்ல இருக்கே!” என்று பொடி வைத்தார். தயங்கினார் நீதிபதி. ஸ்வாமிகள் விடவில்லை. சிரித்த படியே, “நானே சொல்றேன்.
ஏதோ கடுதாசுல எழுதி ஜிப்பாவோட பையில வச்சுண்டிருக்காப்ள இருக்கே!” என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்! அவர் இப்படிச் சொன்னவுடன் நீதிபதி உட்பட அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. எல்லோரும்விக்கித்து நின்றோம்.நீதிபதி ரெட்டியார் தயங்கியபடியே, “அதெல்லாம் ஒண்ணுமில்லே ஸ்வாமி… எனக்கு ஆன்மிக விஷயத்துல ஏதாவது சந்தேகம் வந்ததுன்னா அத அப்படியே இந்த பேப்பர்ல குறிச்சு வெச்சுண்டு…” என்று முடிப்பதற்குள், ஸ்வாமிகள், “இப்படி என்னை மாதிரி சந்யாசிகளை தரிசனம் பண்ணப் போறச்சே, அவாகிட்ட கேட்டு நிவர்த்தி பண்ணிக்கறது வழக்கமாக்கும்… அப்படித்தானே!” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
நீதிபதி பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார். ஸ்வாமிகள் அனைவரையும் சந்நதியில் அப்படியே அமரச் சொன்னார். அனைவரும் அமர்ந்தோம். நீதிபதியை தன் அருட் கண்களால் உற்றுப் பார்த்தார், ஸ்வாமிகள். அந்த அருட்பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட நீதிபதி, தனது ஜிப்பா பையிலிருந்த காகிதத்தை வெளியேஎடுத்தார், வாசித்தார். “இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கிற சுக துக்கங்களுக்கு முந்தைய ஜென்மாக்களில் நாம பண்ணிய புண்ணிய – பாவங்களே காரணம்னு சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கிற ஒரு குறிப்பிட்ட சுகம் அல்லது துக்கத்துக்கு பூர்வத்தில் என்ன புண்ணியம் அல்லது பாவத்தைப் பண்ணியிருக்கோம்கிறத எப்படி தெரிஞ்சுக்கறது? இத தெரிஞ்சுக்க ஏதாவது மார்க்கம் உண்டாங்கிறது என்னோட சந்தேகம் ஸ்வாமி!” சற்று நேரம் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார், அந்த சித்த புருஷர். பிறகு நீதிபதியிடம் நிறுத்தி, நிதானமாகக் கேட்டார்;
“கிருஷ்ணஸ்வாமி ரெட்டியார்… அந்தக் கேள்வியெல்லாம் கெடக்கட்டும்… வெறும் குப்பை… குப்பை! அது போகட்டும்… இப்போ நாம கேக்கற கேள்விக்கு சரியா பதில் சொல்லிண்டே வரணும்! இன்னிக்கு விடியகாலம்பற நாம சரியா நாலரை மணிக்கு ஏந்துருந்தோமா?”
“ஆமா ஸ்வாமி. நாலரைக்கு
எழுந்திருந்தோம்!”
“ஏந்துருந்து பல் தேச்சோம். அப்பறமா மேல் அங்க வஸ்திரத்த போத்திண்டு காத்தாட தபோவன பிராகாரத்த வலம்
வந்தோமா?” – ஸ்வாமிகள்.
“வாஸ்தவம்தான் ஸ்வாமி.” – இது நீதிபதி.
“அப்படி பிரதட்சணமா வரச்சே, ‘ஒரு கப் சூடா காபி கிடைக்குமானு பாக்கறதுக்காக சமையல் கூடத்துல நொழஞ்சோம்… சூடா காபி கெடச்சுது. நாமும் பலராமையாவும் சாப்டோம்…”
“வாஸ்தவம்தான் ஸ்வாமி.
சாப்பிட்டோம்!”
“அப்புறமா, நாம ஜாகைக்குத்
திரும்பிட்டோம்…”
“ஆமா ஸ்வாமி!”
“சரியா அஞ்சரை மணிக்கு அந்த பரிசாரகரே ஒரு ‘ஜக்’குலே சூடா காபி போட்டு எடுத்துண்டு ஜாகைக்கு வந்தார்! சந்தோஷமா இரண்டாவது காபியும் சாப்டோம். சரிதானா?” சிரித்தவாறே
கேட்டார் ஸ்வாமிகள்.“ரொம்பவும் சரிதான் ஸ்வாமி.” – இது நீதிபதி.
ஸ்வாமிகள், “அப்பறமா ஸ்நானத்தை முடிச்சுட்டு ஒக்காந்து பாராயணமெல்லாம் பண்ணினோம். மணி சரியா ஆறரை! அப்போ அதே பரிசாரகர், ‘புதுப் பால்ல காபி ேபாட்டுண்டு வந்திருக்கேன். சூடாருக்கு… ஒரு அரை டம்ளராவது ரெண்டு பேரும் சாப்டுங்கோ’னு வெச்சுட்டுப் போனார்! இரண்டு பேரும் சாப்டேளா?” என்று புருவங்களை உயர்த்திக் கேட்டார்.“ரொம்ப வாஸ்தவம் ஸ்வாமி! இதெல்லாம் தங்களுக்கு எப்படி…?” என்று இழுத்தார் நீதிபதி.
“அது கெடக்கட்டும். நாம அந்த மூணாவது காபிய சாப்டப்பறம்தான் பார்த்தோம்… வெள்ளையா மேல போட்டுண்ருந்த அங்கவஸ்திரத்துல ரவுண்டா ஒரு காபி கறை படிஞ்சிருந்ததை. உடனே நாம வாயை விட்டு, ‘எப்ப சாப்பிட்ட காபியில இந்தக் கறை பட்டிருக்கும்?’ என்று யோசனையோடு சொன்னோம்.
உடனே பக்கத்துல ஒக்காந்திருந்த பலராமையா, ‘என்னய்யா இதுக்குப் போய் கவலைப்பட்டுட்டு இருக்கீங்க. கறைபட்ட எடத்ல கொஞ்சம் சோப்பு போட்டு, அந்தக் கறைபட்ட எடத்த மாத்திரம் ஜலத்தில் கசக்கினால், கறை மறைஞ்சுடப் போறது’னு சொல்ல, நாம அதே மாதிரி செய்து காபி கறையைப் போக்கிவிட்டு, அதே அங்கவஸ்திரத்தைத் தான் இப்போ மேலே போட்டுண்டு வந்துருக்கோம்… வாஸ்தவம்தானே?” என்று கேட்டு வியப்பில் ஆழ்த்தினார் அந்த சித்தர். உடனே நீதிபதி, ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். நா தழுதழுக்க, “ஸ்வாமிகள் சொன்னது எல்லாமே சத்தியம்! இதெல்லாம் எப்படி தங்களுக்கு…! என்று முடிக்கவில்லை.
அதற்குள் ஸ்வாமிகள்; “அது கிடக்கட்டும் ஜட்ஜ் சார்! கார்த்தால நாலரை மணிக்கு ஏந்துருந்து ஆறரை மணிக்குள்ள நாம சாப்பிட்ட மூணு ‘கப்’ காபிலயே, அங்க வஸ்திரத்ல பட்ட காபிக் கறை ‘எந்த காபி சாப்டதுலே’னு நமக்குத் தெரியலே! அப்படி இருக்கறச்சே, பாவ – புண்ணியங்கள் பண்ணிண்டே வந்தா, அந்த பலன்களை அனுபவிக்க மாறி மாறி ஜன்மா எடுத்துண்டே வரணும். அப்படி எத்தனை ஜன்மா தெரியுமா? என்பத்துநாலு லட்சம் ஜன்மா! இதுக்கு முன்னே எத்தனை ஜன்மா எடுத்துருக்கோம்? பின்னால எத்தனை எடுக்கப் போறோம்னு அனுபவிக்கிற ஒரு குறிப்பிட்ட சுகம் அல்லது துன்பத்துக்கு பூர்வ ஜென்மாக்களில் எந்த புண்ணியம் அல்லது பாவத்தை பண்ணியிருப்போம்கறது தெரிஞ்சுக்க பிரயத்தனப்படறதவிட, எப்படி சோப்ல போட்டவுடனே அங்கவஸ்திரத்லேர்ந்து அந்த காபிக் கறை போச்சோ…
அதே மாதிரி சதா காலமும் ‘பகவத் தியானம்’ என்கிற சோப்பினாலே சரீரம்ங்கிற அங்கவஸ்திரத்தில் பட்டிருக்கிற கறைகளை எல்லாம் போக்கிண்டு, மோட்சத்துக்கு பிரயத்தனப்படணும் என்ன புரிஞ்சுதா…” என்று கேட்டுவிட்டு இடி இடியென்று வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தார்.அனைவரும் ஸ்வாமிகளை சாஷ்டாங்கம் விழுந்து நமஸ்கரித்தோம். நீதிபதிகளின் கண்களில் நீர் கசிந்தது. அனைவருக்கும் ஆசி வழங்கி, பிரசாதம் கொடுத்தார்ஸ்வாமிகள். அதன் பிறகு மன நிறைவோடு ஸ்வாமிகளிடம் உத்தரவு பெற்று கிளம்பினோம்!
(அற்புதம் தொடரும்…)
ரமணி அண்ணா