புதுடெல்லி: நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகள் நியமனம் செய்வது, ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு உட்பட மொத்தம் 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகளை நியமனம் செய்வது, அதேபோன்று ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது “இந்த விவகாரத்தில் பதிலளிக்காத 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். அதில், “இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அதற்கான தொகை அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இருப்பினும் அதற்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். மேலும் தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளர் கடந்த 19ம் தேதிதான் புதிதாக பொறுப்பேற்றுள்ளார் என்பதால் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். வேண்டுமென்றால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராவார். இதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு அனுமதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தில் மூன்று மாதம் அவகாசம் கண்டிப்பாக வழங்க முடியாது. வேண்டுமென்றால் நான்கு வாரம் தருகிறோம். அதேபோன்று தலைமை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்தும் எந்தவித விலக்கும் அளிக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.