
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது சுபைர் (36). கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அணுகி ₹10 லட்சம் பணம் தந்தால் கொல்லத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி அந்த இளம்பெண் சுபைருக்கு பல தவணைகளில் ₹ 10 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சுபைர், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் ஓட்டலுக்கு சென்றார். அங்கு வைத்து சுபைர் ஜூசில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு கொடுத்துள்ளார். ஜூசை குடித்து மயக்கமடைந்த அவரை, சுபைர் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவர் தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோவும் எடுத்துள்ளார். பின்னர் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி இளம்பெண்ணை மீண்டும் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். தான் கர்ப்பிணியாக இருப்பதாக கூறியும் சுபைர் அவரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் சுபைரின் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து இளம்பெண் பரவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுபைரை கைது செய்தனர்.