வாஷிங்டன்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த குவாட் அமைப்பு, இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஏற்பாடு செய்தவர்கள், நிதி உதவி செய்தவர்கள் எந்த தாமதமும் இல்லாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ளது. மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், இந்தியா சார்பில் ஜெய்சங்கர், அமெரிக்காவின் மார்கோ ரூபியோ, ஆஸ்திரேலியாவின் பென்னி வோங், ஜப்பானின் தகேஷி இவாயா ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நிறைவாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், குவாட் அமைப்பு பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஏற்பாடு செய்தவர்கள், நிதி உதவி செய்தவர்கள் எந்த தாமதமும் இல்லாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ், ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், பாகிஸ்தானையோ அல்லது மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையேயான 4 நாள் போர் குறித்தோ கூட்டறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.