Tuesday, April 23, 2024
Home » திருத்தணி நகராட்சியில் ரூ.115 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்

திருத்தணி நகராட்சியில் ரூ.115 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்

by Ranjith

திருத்தணி: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், திருத்தணி நகராட்சியில், ரூ.115 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திருத்தணியில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ மோட்டாரை இயக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில் 14 ஆயிரம் வீடுகள் மூலம் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு, 90 லிட்டர் குடிநீர் வீதம், 45 லட்சம் லிட்டர் குடிநீர் நகராட்சிக்கு தேவைப்படுகிறது.

தற்போது அரக்கோணம் கூட்டுக்குடிநீர், அருங்குளம் கொற்றலை ஆற்றில் மூன்று கிணறுகள் மற்றும் நகராட்சியில் போடப்பட்டுள்ள, 30 ஆழ்துளை கிணறுகளில் இருந்து ஒரு நாளைக்கு, 20 லட்சம் முதல் 30 லட்சம் லிட்டர் மட்டுமே பெறப்படுகிறது. இதனால், மழை காலங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தெருக்குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதால், திருத்தணியில் கடும் குடிநீர் பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில், திருப்பாற்கடலில் இருந்து திருத்தணி நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் ஏற்படுத்த, ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் துவங்கியது. கூட்டுக்குடிநீர் சேமிப்பதற்கு, திருத்தணி சேகர்வர்மா நகரில், 3.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தேக்கும் நீர்ஊந்து நிலையமும், இந்திர நகர் பகுதியில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணிகள் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திருத்தணி சேகர்வர்மா நகரில் உள்ள மின்மோட்டார்களை இயக்கி வைத்தார். இந்நிலையில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து மின்மோட்டார்களை இயக்கி வைத்தார். இதில் நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி துணைத்தலைவர் சாமிராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

* 3.5 கோடி மதிப்பீட்டில் திருநின்றவூர் நகராட்சிக்கு புதிய கட்டிடம்
அண்மையில் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருநின்றவூர் நகராட்சி தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. போதிய இட வசதி இல்லாமல் அதிகாரிகளும் பணியாளர்களும் சிரமத்துடன் பணி செய்து வந்த நிலையில் கடந்தாண்டு புதிய கட்டிடம் கட்ட ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் அவர்களால் பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிலையில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளை கொண்டு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

அந்த புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதைக் காண திருநின்றவூர் நகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த திரையில் காணொலி வாயிலாக ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகளும், நகராட்சி மன்ற உறுப்பினர்களும் நேரலையில் கண்டனர். இதனைத் தொடர்ந்து புதிய நகராட்சி கட்டிடத்தை ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ குத்து விளக்கு ஏற்றி அறைகளை பார்வையிட்டு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi