பூந்தமல்லி: மதுரவாயலில், சிறுவர், சிறுமிகளுடன் போலீஸ் இணை கமிஷனர் படம் பார்த்தார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்டு 112 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள், போட்டி தேர்வு பயிற்சிகள், மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்வி சுற்றுலாவாக மாணவர்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் சிறார் மன்றங்களை சேர்ந்த சிறுமிகள் மற்றும் சிறுவர்களின் வேண்டுகோளின் பேரில் மதுரவாயலில் உள்ள தனியார் திரையரங்கில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற படம் இலவசமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் உற்சாகத்துடன் திரைப்படத்தை கண்டுகளித்தனர். அவர்களுக்கு பாப்கான், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல இணை கமிஷனர் மனோகர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவானந்த் மற்றும் போலீசார் கலந்து கொண்டு படத்தை கண்டு ரசித்தனர். இந்த படம் சிறார் மன்றங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.