* உடற்பத்தியாளர்கள்,தொழிலாளர்கள் கோரிக்கை
கரூர் : கரூரில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் கொசுவலை ஏற்றுமதி செய்த தொழிலை காக்க ஒன்றிய, மாநிலஅரசின் கூட்டு நடவடிக்கை தேவைகரூர் மாநகரில் டெக்ஸ்டைல்ஸ், பஸ் பாடி கட்டுதல்தொழிலுக்கு அடுத்தபடியாக பெரிய தொழில் கொசுவலை தயாரிப்பு.
இத்தொழிலில் சுமார் 40,000 முதல் 60,000 தொழிலாளர்கள் நேரடியாகவும் ஒப்பந்த முறையில் வேலைவாய்ப்பைப் பெற்று பயன்பெறுகிறார்கள். கரூரில் தயார் செய்யப்படும் கொசுவலைகள் இந்தியாவில் பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம்,அஸ்ஸாம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் விற்பனையாகிறது.
கரூரில் கெமிக்கல் கலந்த கொசு வலை உற்பத்தி செய்யும் இரண்டு பிரதான ஏற்றுமதி நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு வரை வருடத்திற்கு ரூ.1,000 கோடி முதல் ரூ.1,200 கோடி வரை ஏற்றுமதி செய்தனர். அதேபோல் உள்ளூர் பயன்பாட்டிற்கு கொசு வலை சுமார் 120 உற்பத்தியாளர்கள்இரண்டு ஆண்டுக்கு முன்பு ஆண்டுக்கு ரூபாய் 200 கோடி வரை உற்பத்தி செய்தனர்.
தற்போது உள்ளூர் உற்பத்தியும் ரூ.80 கோடி முதல் 100க்கும் குறைவாக கொசு வலை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த கொசுவலை தயாரிப்பு என்பது கடந்த மூன்று வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு தொழில் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏராளமான நிறுவனங்கள் கொசுவலை உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இந்நிலையில், திருட்டுத்தனமாக பங்களாதேஷ், சீனா, தைவான் ஆகிய நாடுகளில் இருந்து சரக்கு வந்ததால் மிகவும் விற்பனை பாதித்தது.
எனவே ஒன்றிய அரசு கொசு வலை தயாரிப்பு தொழிலை காக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். நமது நாட்டில் உற்பத்தியாகும் கொசுவலை துணியை உற்பத்தியை அதிகப்படுத்தவும், உற்பத்தியாளர் பாதிக்காமல் இருப்பதற்காகவும் பொதுமக்கள் அதிக அளவில் உள்நாட்டு தயாரிப்பு கொசு வலைகளை வாங்கி பயன்படுத்த முன்வர வேண்டும் .
பொதுமக்களின் சுகாதாரத்தை காத்திடும் பொருட்டு கொசு வலை உற்பத்தியாளர்களிடம்மாநில அரசு கொள்முதல் செய்து ரேசன் கடையில் குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். ஒன்றிய அரசு மாநில அரசை கலந்து ஆலோசித்து வரி விதித்தால்சிறு தொழில் பாதுகாக்கப்படும்.
தற்போதுள்ள விதிமுறைகளால் சிறு தொழில்கள் நடத்த முடியாத அளவிற்கு அமல்படுத்தி உள்ளது. அரசுகள் வருமானம் ஒன்றே குறியாக செயல்படுவதால் சிறு உற்பத்தியாளர்கள்,வியாபாரிகள் இன்னும் சில வருடங்களில் நிரந்தரமாக மூடப்படும் நிலையில் உள்ளது.வங்கி,ஜிஎஸ்டி, மற்ற பொது சேவை நிறுவனங்களும் மக்களின் தொடர்புக்கு அப்பால்தான் இயங்குகின்றன. இது சரிசெய்யப்படாவிட்டால் சிறு,குறு தொழில்கள் காலப்போக்கில் அழிந்துவிடும்.
எனவே ஒன்றிய அரசு, வெளிநாட்டிலிருந்து சட்டத்திற்கு விரோதமாக கொசு வலைகளை நமது நாட்டிற்கு வந்து விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட உற்பத்தியாளர் சங்க உரிமையாளர் மற்றும் வேலை பார்க்கும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.