Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

‘ஆதி திராவிடர் நலத்துறை வேண்டாம்’ அமைச்சர் பதவியை ஏற்க ஜான்குமார் தயக்கம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி பாஜகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. நேற்று பாஜவை சேர்ந்த மூன்று நியமனம் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நியமன எம்எல்ஏக்களாக மூன்று பேர் விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர். அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் நேற்று பாஜக தலைமையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இதுபோன்ற சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில், ஆதிதிராவிடர்களுக்கு இடம் இல்லாதது கடும் விமர்சனத்தை உள்ளாகியுள்ளது. இந்நிலையில், அதிருப்தி கோஷ்டியில் உள்ள ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஆதி திராவிடர் நலத்துறை தனக்கு வேண்டாம் என்று கூறி ஜான்குமார் மறுத்து வருகிறார்.

இதற்கிடையே புதிய அமைச்சர் நியமனம், இலாகா ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பாஜக தலைவர் செல்வகணபதி மற்றும் சட்டமன்ற கட்சித்தலைவரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை நேற்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

இதில் சாய்.ஜெ. சரவணன் குமார் வைத்திருந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு அதற்கு பதிலாக வேறு துறைகளை ஒதுக்கும்படி ரங்கசாமிடம் கூறினர். ஆனால் இதனை முதல்வர் ரங்கசாமி ஏற்காமல், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துறைகளையே நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் இலாகாவை மாற்றி அமைப்பது எங்களது கட்சிக்குள் சில பிரச்னைகளை எழுப்பும் என மறுத்துவிட்டார். முதல்வரை சமாதானம் செய்து ஜான்குமாருக்கு வேறு இலாகாவை ஒதுக்குவது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் புதுச்சேரி அரசியலில் தொடர்ந்து பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.