சென்னை: சென்னை, கிண்டி, திரு.வி.க. நகர் தொழிற்பேட்டையில், சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தொழிலாளர்களை தேடி பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவம் என்பது மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்பு திட்டங்களில் முதன்மையான திட்டம். இத்திட்டம் மூலம் 2 கோடியே 34 லட்சத்து 88 ஆயிரத்து 431 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளில் பணியாற்றுகிற 8,35,000 பேரை கணக்கில் கொண்டு செயல்படுத்தப்பட்டது. இதுவரை 3,90,111 பேர் பரிசோதனை செய்யப்பட்டு 30,506 பேருக்கு புதிய நோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்திடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனைகள் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின்படி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.