சென்னை: முப்படைகளின் முன்னாள் படை வீரர்களுக்காக சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 4ம் தேதி நடக்கிறது. இந்திய பாதுகாப்பு படைகளின் முன்னாள் வீரர்களுக்காக இந்திய ராணுவத்தின் சார்பில் சென்னை தாம்பரம் விமானப்படை மைதானத்தில் அடுத்த மாதம் 4ம் தேதி (ஜூலை 4) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் கீழ் இயங்கும் மறுபணியமர்த்தலுக்கான தலைமை இயக்குநரகம் இதற்கான விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்கள், தனியார் துறை, பெருநிறுவனங்கள் போன்றவற்றில் காவல்பணி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் பொருட்கள் மேலாண்மை, சுகாதாரம், நிர்வாகம், பொறியியல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு பெற முகாம் உதவும்.
முன்னாள் படை வீரர்கள் நலனில் பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த மாபெரும் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளில் வீரர்கள் பெற்ற கட்டுப்பாடு, தலைமைத்துவம் போன்ற பண்புகளுடன், தொழில்நுட்ப திறன்களை சிவிலியன் தொழில் துறைக்கு அவர்கள் வழங்கும் வகையில் முகாம் நடக்கிறது.
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பணி அமர்த்த விரும்பும் நிறுவனங்கள் www.esmhire.com என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இணையதளத்தில் தங்களை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம், அல்லது மறுபணியமர்த்தலுக்கான தலைமை இயக்குநரகத்தின் www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில், Job Fair என்ற பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பொதுவாக, பாதுகாப்பு படைவீரர்கள் இளம் வயதிலேயே தங்கள் பணிக்காலத்தை நிறைவு செய்து வெளிவருவதால், அவர்கள் பணிபுரிவதற்கான தங்கள் எஞ்சிய காலத்தை தனியார் துறையில் செலவிட இத்தகைய மறுபணியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் நாடு முழுவதும் 18 இடங்களில் இதுபோன்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் முன்னாள் படை வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட உள்ளன.