சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த, சிஇஓ அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் பூங்கொடி(37). நர்சிங் படித்துள்ள இவர், சமீபத்தில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அதில், அரசுப்பள்ளியில் ஆய்வக தொழில்நுட்ப பிரிவில் காலிப்பணியிடம் உள்ளதாக 2022ல் தகவல் கிடைத்தது. அந்த பணியை பெற்றுத்தருவதாக, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தமிழரசன் (59) என்பவர் கூறினார்.
இதனை நம்பி ரூ.15 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து உரிய பதில் அளிக்காததுடன், பணத்தை திருப்பி கேட்டதற்கு ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய அஸ்தம்பட்டி போலீசார், கண்காணிப்பாளர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கண்காணிப்பாளர் தமிழரசனை சஸ்பெண்ட் செய்து, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.