சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.25.31 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பல் மருத்துவமனை, கலையரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.64.90 கோடி மதிப்பீட்டில், 620 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கும்.
ரூ.135 கோடி மதிப்பீட்டில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் 750 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம், இந்த பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படவுள்ளது. 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். ஜே.என்.1.1 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது பரவிக் கொண்டிருக்கிறது. கேரளாவில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு காய்ச்சல், இருமல், சளி போன்ற மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. இதுவும் 4 நாட்களில் சரியாகி விடுகிறது. எனவே பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.