ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அங்கு மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி, 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உருவெடுத்துள்ளது. மேலும், கூட்டணியில் இருந்த காங்., 16 இடங்களில் வென்றது. 21 இடங்களை வென்று பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில்,ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட்டின் முதலமைச்சராக 3வது முறையாக இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார்.
சோரன், கடந்த 2019 டிசம்பர் 29 அன்று, இதே மைதானத்தில் முதல்வராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அமைச்சரவை தொடர்பாக காங்கிரஸுடன் தொடர் இழுபறி நீடித்து வருவதால், ஹேமந்த் சோரன் இன்று மாலை தனியாக பதவியேற்பார் என்றும், பின்னர் அமைச்சரவை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, இன்று நடைபெறும் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில், ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். குறிப்பாக, இந்நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.