ராம்கர்: ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை கணவர் கீழே தள்ளி கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் தேவரியாவை சேர்ந்தவர் குஷ்புகுமாரி. இவரது கணவருடன் ஜார்க்கண்டின் பர்க்கானாவில் இருந்து வாரணாசிக்கு செல்வதற்காக வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். புர்குண்டா மற்றும் பத்ராது ரயில் நிலையத்துக்கு இடையே ரயில் வந்துகொண்டு இருந்தது.
அப்போது திடீரென அவரது கணவர் குஷ்புகுமாரியை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து குஷ்புகுமாரி தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். பெண் காயமடைந்த நிலையில் கிடப்பதை பார்த்த ரயில்வே லைன்மேன், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த அவர்கள் குஷ்பு குமாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதலில் ராம்கர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் ரிம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்ட குஷ்புகுமாரி சிகிச்சை பெற்று வருகின்றார். விசாரணையில் ரயிலில் கணவருடன் பயணித்துக்கொண்டு இருந்தபோது அவர் தன்னை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயன்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.