ஜார்கண்ட்: ஜார்கண்ட் 2ம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த 13ம் தேதி 41 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 38 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 14,218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 528 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 120பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அதிகபட்சமாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகில் அத்தரிடம் 400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதனிடையே இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை மாலையுடன் நிறைவடைகிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் ஆகிய இருவரும் இதுவரை 60 பேரணிகளில் பங்கேற்ற நிலையில், பரப்புரையில் இறுதி நாளான இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதுவரை 7 பொது கூட்டடங்களிலும், மல்லிகார்ஜுன கார்கே 4 பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். இதேபோல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஒன்றிய அமைச்சர்கள் பலரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஜார்கண்ட் தேர்தலில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம், நகைகள் உள்ளிட்ட 197 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.