சென்னை: திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வெளியிட்ட அறிக்கை: ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே ஒன்றிய பாஜ அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மக்களை மென்மேலும் பாதிக்கும் கொள்கைகளையே செயல்படுத்தி, சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.
தேசிய வங்கிகளில் சாமானிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கடன் வழங்காமல், பெரும் நிறுவனங்களுக்கு கடன்களை அள்ளி வழங்கி, பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாராக் கடன் என்று சொல்லி ஒன்றிய பாஜ அரசு தள்ளுபடி செய்கிறது. இனிமேல் வங்கிகளில் நகை கடன் பெற நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும். தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கிய நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழங்கப்படும் போன்ற புதிய நிபந்தனைகளை விதித்து விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜ அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் இணைந்து வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் கழக விவசாய அணியினர் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.