திருவாரூர்: திருவாரூர் அருகே இளவங்கார்குடி ராஜகுரு நகரை சேர்ந்தவர் நாகநாதன் (45). வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பிரபாவதி (40). நேற்றுமுன்தினம் காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கொல்லைப்புறமாக சென்று பார்த்த போது, சமையலறையில் பிரபாவதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து திருவாரூர் தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக இளவங்கார்குடியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், வீட்டில் பிரபாவதி மட்டும் தனியாக வசித்து வருவதை அறிந்து சந்தோஷ், கடந்த 17ம் தேதி இரவு 10 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது சமையல் அறையில் நின்றிருந்த பிரபாவதியின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார்.
அவரை அடையாளம் கண்டு கொண்டதால் போலீசிடம் தெரிவித்து விட்டால் மாட்டிக்கொள்வோம் என கருதி, பெட்ஷீட் மூலம் பிரபாவதி முகத்தை மூடி சுவற்றில் மோதியுள்ளார். பின்னர் கத்தியால் கழுத்தில் குத்தி, முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். தாலி செயின் மற்றும் கொலுசை அவரது வீட்டு மாடியில் மறைத்து வைத்து விட்டு செல்போனை மட்டும் எடுத்து கொண்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து, கொலை நடந்த 12 மணி நேரத்தில் சந்தோஷை கைது செய்தனர்.