சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே துபாய் இன்ஜினியர் வீட்டில் அவரது பெற்றோரை கத்தி முனையில் கட்டிப்போட்டு தாக்கி 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக வாங்கி வைத்த நகைகள் கொள்ளை போனதால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசரிவர்மன், இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் துபாயிலே வசித்து வந்தார். இந்த நிலையில் தனது இரண்டாவது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக தனது சொந்த ஊரான கடுவனூர் கிராமத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வந்தார். வரும் ஜூலை 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
அதற்காக புதிதாக வாங்கிய நகை மற்றும் பழைய நகைகள் என 200 பவுன் நகைகளை வீட்டில் வைத்திருந்தார். இதற்கிடையே கேசரிவர்மன் தனது குழந்தைகளின் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக குடும்பத்துடன் நேற்று மாலை சென்னைக்கு சென்றார். வீட்டில் அவரது தந்தை முனியன் மற்றும் தாய் பொன்னம்மாள் ஆகியோர் மட்டும் இருந்தனர். வீட்டில் வயதான தம்பதியர் மட்டுமே இருப்பதை அறிந்த மர்மநபர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். மின்விளக்குகளை எரிய விடாமல் செல்போன் டார்ச் லைட் மூலமாக வீட்டில் இருந்த முனியன் மற்றும் பொன்னம்மாளை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு தாக்கி நகை வைத்துள்ள பீரோ சாவியை கொடு இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளனர். உயிருக்கு பயந்த தம்பதி சாவியை கொள்ளையரிடம் கொடுத்தனர்.
உடனே சாவியை பெற்றுக் கொண்ட கொள்ளையர்கள் பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தப்பி சென்ற பிறகு முனியன் சென்னையில் உள்ள மகனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு கேசரிவர்மன் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை போன தங்க நகையின் மதிப்பு ரூ.1.5 கோடி ஆகும். அதிகாலையில் வயதான தம்பதிகளை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு தாக்கி 200 பவுன் நகையை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.