கோவை: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நகைப்பட்டறை அதிபர் ஜெய்சன் (55). இவர், நகைகள் ஆர்டர் எடுப்பதற்காக அடிக்கடி சென்னை மற்றும் கோவைக்கு வந்து தங்க கட்டிகளை வாங்கி சென்று நகைகள் தயாரித்து நகைக்கடைகளுக்கு கொடுத்து வருகிறார். கடந்த 12ம் தேதி ஜெய்சன் மற்றும் கடை ஊழியர் விஷ்ணு ஆகியோர் தங்க நகைகளுடன் காரில் கோவைக்கு வந்தனர். பின்னர், ரயில் மூலம் சென்னை சென்றுள்ளனர்.
அங்கு நகைகளை சப்ளை செய்து விட்டு மீண்டும் 1.25 கிலோ தங்கக் கட்டியுடன் நேற்று முன்தினம் இரவு ரயில் மூலம் கோவைக்கு நேற்று காலை வந்தனர். அங்கிருந்து காரில் கேரளாவிற்கு செல்லும் வழியில், பாலக்காடு சாலையில் எட்டிமடை பெட்ரோல் பங்க் அருகே லாரி ஒன்று திடீரென வழிமறித்தது. அதிலிருந்து 5 பேர் கொண்ட கும்பல் இறங்கி கார் கண்ணாடியை அடித்து உடைத்து உள்ளே ஏறி அவர்களை கடத்தி சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவரையும் இறக்கி விட்டு கார் மற்றும் 1.25 கிலோ தங்கம், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பினர்.