பந்தலூர்: நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை 9ம் மைல் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முகம்மது. இவர் தனியார் தோட்டத்தில் காவலராக பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி மைமூனா (55). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். இந்நிலையில், முகம்மது வேலைக்கு சென்றுவிட்டார். கடந்த 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மைமூனா உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நெலாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் ஹயாருனிஷா, அவரது தங்கை ஹசினா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் நகைக்காக மைமூனாவை கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 6 பவுன் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். நகைக்காக மாமியாரை மருமகளே அடித்து கொன்ற சம்மபவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.